சொல்லித்தாருங்கள்.....

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று என்பார்கள்.குழந்தையாக இருக்கும் போது அனைவருமே மேன்மையான குணங்களோடு இருக்கின்றோம்.உதாரணமாக தவறுகளை மறந்துவிடுவதில்

அன்புக்குரிய ஆசிரியர்களே!
உங்கள் முன் உட்கார்ந்து இருக்கும் மாணவர்கள்எண்ணிக்கை எத்தனையாயினும், அத்தனை பேரிடமுமம் அன்பையும்,அரவணைப்பையும் தர தயாராயிருங்கள்.அக்கறையோடும்,அன்போடும் அவர்களை கவனித்து பாருங்கள்,மகுடிக்கு மயங்கும் நாகமாய் உங்களிடம் அடங்கியும்,மயங்கியும் நிற்பார்கள், அவ்வாறு மயங்கும் மாணவனிடம் நீங்கள் நினைத்ததை விளைவிக்கலாம் என்பது அப்பட்டமான உண்மை. உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களையும்,பெற்ற தாயைப்போல் உங்களை பார்க்கின்ற நிலையை ஏற்படுத்தி தாருங்கள்.அது உங்களின் உள்ளார்ந்த, இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எழுகின்ற அன்பாலும், பண்பாலுமே முடியும்.கம்பால் காரியம் சாதிப்பவனை விட அன்பால் சாதித்து காட்டுபவனே அற்புத ஆசிரியன்.கம்புக்கு பயப்படுபவன் பாடத்தில் தேர்ச்சி அடைவான், அன்புக்கு அடிமையாகுபவனே வாழ்க்கையிலே தேர்ச்சி அடைகிறான். தேவையான நேரத்தில் குரலில் கண்டிப்பை வையுங்கள்.உங்கள் மனதில் வஞ்சம் வைத்து விடாதீர்கள் ஏனென்றால் அவர்கள் உங்கள் பிள்ளைகள்.
அவர்களுக்கு நீங்கள் இரண்டாம் பெற்றோர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
புத்தக பாடத்தை உருவேற்றுவதை தவிர்த்து  புன்னகை பூக்களை உங்கள் வவகுப்பறையில் மலரச் செய்யுங்கள்,முடிந்தால் பூத்து குலுங்கும் நந்தவனங்களிலும்,குயில் கூவும் தோப்புகளிலும்,கடலின் கரைகளிலும்,மலையின் முகடுகளிலும் உங்கள் வகுப்பறை மலரட்டும்.உங்கள் வகுப்பறை மாணவர்களுக்கு 8 மணி நேர வனவாசமாக இருக்க வேண்டாம்,பூத்துக்குலுங்கும் பூங்காவனமாகட்டும். உங்கள் பிள்ளைகளிடம் உள்ள மூடநம்பிக்கைகளையும்,எதிர்மறை எண்ணங்களையும் பறித்து விடுங்கள். புன்னகையையும்,குறும்புத் தனத்தையும் பறித்து விடாதீர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்ஒரு ஆற்றல் புதைந்தே கிடக்கிறது,அதை வெளிக்கொணர்வது கல்வி என்ற விவேகானந்தனின் வாக்கை நினைவில் வைதேதுக்கொள்.

ஒரு ஆசிரியன் உருவாகிறான்

தகுந்த படிப்பும், பட்டமும் பெற்றுவிட்டால் மட்டும் ஆசிரியனாக முடியாது. ஆசிரியன் என்பது பிழைப்பு அல்ல வாழ்க்கை என்பதை யாரால் உணர்ந்து நடந்து கொள்ள முடியுமோ அவர் மட்டுமே ஆசிரியராகிறார். கடமையை கழிப்பது என்றில்லாமல்,பணி செய்து கிடப்பதே கடனாக யாரால் கருத முடியுமோ அவரே ஆசிரியர். வருமானத்திற்காக வேலை செய்பவன் அல்ல ஆசிரியர், சமுதாயத்தின் வருங்காலத்தை முன்னிறுத்தி வேலை செய்பவனே ஆசிரியன். களிமண்ணாய்,கரடுமுரடு கற்களாய் தன்னிடம் தரப்பட்டுள்ள மாணவனை தன்னகத்தே உள்ள பண்பு,அறிவு, மனப்பான்மை  என்ற உளிகளையும்,சுத்திகளையும் கொண்டு செதுக்கி சிலையாய், அழகிய வடிவமாய் மாற்றத் தெரிந்தவனே ஆசிரியன்.

சமுதாயத்தில் புரையோடி போயிருக்கும் பல மூடப்பழக்கங்கள் போல, ஆசிரியர் குறித்தும் பொதுவான மனப்பான்மை உள்ளது. ஆசிரியன் என்பவன் பாடப்பொருள்களை கற்று தேர்ந்த அறிவாளியாகவும்,அதை கற்பிப்பதில் வல்லவனாகவும் இருத்தல் வேண்டும்.அடிக்கடி தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயாராக்கும் பயிற்சியாளனாக(Coacher) பரிணமித்தல் வேண்டும். மாணவர்களோடு சிரித்து பேசக்கூட பல ஆசிரியர்களின் தன்மானம் இடம்தர மறுக்கிறது. பல பள்ளி நிர்வாகங்களும் இதை மறுக்கின்றன.

ஒரு மாணவனின் மனவோட்டத்தை உங்கள் நினைவுக்கு தரவிரும்புகிறேன் நண்பர்களே!  மூன்றாம் வகுப்பு மாணவனிடம் கேட்டேன், 'நீ உன் வேலைகளை நன்றாக செய்யும் நேரத்தில் உன் ஆசிரியர் உன்னை ,' பாராட்டுவாரா?'.அதற்கு அந்த சின்னஞ்சிறிய குழந்தை 'ஆமாம்,பாராட்டுவாங்க!' என்றது. 'எப்படிமா பாராட்டுவாங்க ' என்றேன்.அதற்கு அந்த குழந்தை 'வெரி குட் சொல்லுவாங்க!'
தொடர்ந்து அந்தக்குழந்தை சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?, 'ஆனால் செல்லக்குட்டி சொல்லவே மாட்டாங்க!'
இதைக் கேட்டதும் என் மனதில் தோன்றியது ஒன்றுதான், குழந்தைகளை பாராட்டும்போதும் பாசத்தோடு பாராட்டுங்கள். வெறுமனே சம்பிராதாய வார்த்தைகளை சொல்லி பாராட்டுவதில் பெரியவர்கள் வேண்டுமானால் உச்சிகுளிரலாம். ஆனால் குழந்தையை பாராட்டும் போது உள்ளன்போடு, கொஞ்சலோடு பாராட்டுவதையே அக்குழந்தை மனமகிழ்வோடு ஏற்கிறது. குழந்தை உண்மை அதிர்வுகளை தெரிந்து கொள்ளும் வல்லமையுடையவர்கள்.

ஆடுவோமே!பாடுவோமே!விளையாடுவோமே!

குழந்தைகளுக்கு மிகமுக்கியமாக பிடித்த மூன்று விஷயங்கள் ஆடுவதும், பாடுவதும்,விளையாடுவதும்தான். இவைகளை  மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியரும் செய்தால் அது ஆசிரியர்குலத்திற்கே சுயமரியாதை இழுக்கு என்றும்,மாணவர்களோடு விளையாடினால் அவர்கள் நம் தலைக்குமேல் ஏறிவிடுவார்கள்,நம்மை மதிக்கமாட்டார்கள் என்று யாராவது துர்போதனை செய்தால் அவர்களை தவிர்த்து விடுங்கள் அல்லது ஆசிரியப்பணியிலிருந்து தடுத்து விடுங்கள்.
தொண்டனுக்கு தொண்டனாக இருப்பவனே தலைவனாக முடியும். மாணவனிடம் மாணவனாக பழக தெரிந்தவனே நல்ல ஆசிரியன்.

மாணவர்களோடு சேர்ந்து ஆடுகின்ற, பாடுகின்ற,விளையாடுகின்ற ஆசிரியனையே அவன் கடைசிவரை நினைவில் வைத்துக்கொள்கிறான். தெய்வங்களே தனது பக்தனுக்காக ஆடியும்,பாடியும்,விளையாடியும் மகிழ்வித்திருக்கிறதென்றால், நாம் மட்டும் ஏன் தள்ளி நிற்கிறோம். மாணவனின் எல்லா செயல்பாட்டிலும் தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பதோ,வெளியில் இருந்து வழிகாட்டுவதோ மாணவர்களின் மனதை தொடுவதில்லை,வேண்டுமானால் சில மாணவர்களின் அறிவை மட்டும் தொடுகிறது. ஆசிரியர்களே,முதலில் மாணவனின் மனதை தொடுங்கள்,அறிவு கதவு தாமாக திறக்கப்படும். அறிவு திறவுகோலை நீங்கள் போட வேண்டிய இடம் மனம்தான்.அதற்கு உடனிருந்து செயல்படுதலும்,பங்கேற்று மகிழ்வதுமே ஆரம்ப பள்ளி ஆசிரியனுக்கு தேவை.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அக்குழந்தைகளின் கள்ளம்கபடமற்ற உள்ளத்தில் நீங்களும் இடம் பெறுவீர்கள்.அவர்களின் நிலையில் நாமும் இறங்கும் பட்சத்தில், மாணவனின் அறிவு,பண்பு,உடல்,ஒழுக்கம் அத்தனையிலும் எளிதாக வழிகாட்டி அவனை மேன்மையுற ச் செய்யமுடியும். அர்ஜினனுக்கு கீதை என்னும் பாடம் சொன்ன அந்த கண்ணணும், கடவுள் என்ற நிலையிலிருந்து சொல்லவில்லை,பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதியாக தன்னை தாழ்த்தியே பாடம் சொன்னான். அன்பும்,அக்கறையும் பிறர்மீது உண்டாகும் போது ,அவர்களின் நலனுக்காக தாமாகவே தன்னை தாழ்த்தி கொள்கிறோம். ஆசிரியர்களே! இரங்குங்கள் கொஞ்சம் இறங்குங்கள்.தன்னை தாழ்த்துகிறவனே உயர்வான்,உயர்வடைய செய்வான்.

ஒரு சின்னக் கதையை உங்கள் எண்ண சுழலுக்குள் தருகிறேன். பள்ளியில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடக்கிறது.அதில் மாணவர்கள் பல்வேறுவிதமான ஓவியங்களை தீட்டியிருக்கிறார்கள்.அவற்றில் ஒரு ஓவியம் மட்டும் நடுவர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆம்! அந்த ஓவியத்தில் ஒரு அழகிய கையை, சிறு இதழ்கள் முத்தமிடுவதுபோல் வரைந்து, கீழே இந்த கரங்களை நேசிக்கிறேன் என்று பொருள்பட மழலை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது,நடுவர்கள் வியப்பில் ஆழ்த்திய அப்படத்தை வரைந்திருந்தது,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி,அவளை அழைத்து நடுவர்குழு, 'நீ வரைந்திருக்கும் இந்த கை யாருடையது,முத்தமிடும் இதழ் யாருடையது என்று கேட்டனர். உன் அம்மாவின் கையா?,சகோதரியின் கையா?,உன் தோழியின் கையா? யாருடைய கை?  என்று கேட்டபோது அந்தக்குழந்த சொன்ன பதில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது,அது என் ஆசிரியையின்(ஆசிரியரின் பெயரை சொல்லியது) அன்பான கை, உடல் ஊனமுற்ற என்னால் மற்ற மாணவ
ர்களைப்போல் விளையாட முடியாமல் ஒதுங்கி நிற்பேன், அந்த ஆசிரியை உனக்கு விளையாட வேண்டுமா?வா என்று என்னை கைபிடித்து அழைத்துச் சென்று மற்ற மாணவர்களோடு கலந்து என்னோடு விளையாடும் அந்த ஆசிரியையின் கைதான் இது.ஒருநாள் நல்ல மழை, மற்ற மாணவர்கள் மழையில் நனைந்து குதூகலமிட்டனர்,நான் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் அந்தக்கை என் தோள்மீது பட்டது,என்னை அழைத்துச் சென்று மழையில் நனையச்செய்ததோடு,தானும் நனைந்து ஆடிப்பாடியது அந்த கைதான் அது,என் தாய் தந்தையருக்கும் மேல் என்னை அரவணைத்து ஆனந்தப்படுத்தும் ஆசிரியையின் கை 'என்று அந்தப் பிஞ்சு சொல்லி முடித்த போது,அத்தனைபேரின் கண்களிலும் கண்ணீர். ஒவ்வொரு குழந்தையும்எதிர்பார்க்கும் ஆசிரியர் இப்படிபட்டவர்தான், அன்பில் வழியதே உயர்நிலை மறந்துவிடாதீர்கள்.

நரேந்திரன் என்ற சீடனைத் தேடி தெருத்தெருவாக அலைந்தாராம்,அவனைக்காணாது தவியாய் தவித்தாராம் இராமகிருஷ்ணபரமஹம்சர்.ஆம்!அப்பேற்பட்ட ஆசிரியனாலேயே விவேகாந்தனை உருவாக்க முடிந்தது.தனது சீடன் தனக்கு வைத்த சோதனைகளை கண்டு கோபப்படாமல் அதனை ரசித்து ஏற்றுக்கொண்டவர் பரமஹம்சர்.

உங்கள் நிலையிலிருந்து கீழிறங்கி மாணவர்களோடு செயல்படுவதற்கு தயாராகிவிட்ட ஆசிரியர்களே!ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,உங்கள் அன்பும்,பாசமும்,அக்கறையும் எல்லா மாணவர்களையும் சரிசமமாக சென்றடையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 'நாம் ஒதுக்கப்பட்டு விட்டோமோ!' என்ற எண்ணம் எந்த மாணவனிடமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
        
               நமது முன்னோர்கள் சொன்ன குருகுலக் கல்வியில் குருவும்,சீடனும் மிக நெருக்கமாகவே வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம். குடும்பமாகவே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம்.ஒரு குருகுலத்தில் பல மாணவர்கள் தங்கி படித்து வந்தனர்.அதில் ஒரு மாணவன் மற்ற மாணவர்களின் பொருட்களை திருடுவதும், பொய் சொல்லுவதுமாக இருந்தான். இதனால் கோபமுற்ற மாணவர்கள் தங்கள் குருவிடம் திருடும் மாணவனைப்பற்றி முறையிட்டனர்.குரு அந்த மாணவனை அழைத்து அருகில் இருத்தி,'மற்றவர்கள் பொருளை திருடுவது தவறு,அவ்வாறு செய்யக்கூடாது'என அறிவுரை வழங்கினார். சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் திருட ஆரம்பித்தான்.மற்ற மாணவர்கள் வெறுப்புற்று, குருவிடம் சென்று மீண்டும் முறையிட்டனர்.மீண்டும்அவனை அழைத்த குரு,'திருடக்கூடாது,பொய் சொல்லக்கூடாது 'என்று அறிவுரை வழங்கிஅனுப்பி வைத்தார்.மீண்டும் அந்த மாணவன் திருட ஆரம்பிக்க,மற்ற மாணவர்களெல்லாம் குருவிடம் போய் நடந்ததை சொல்ல,குருவும் வழக்கம்போல் அந்த மாணவனை அன்போடு அழைத்து,அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.இதைக்கண்டு எரிச்சலுற்ற மற்ற மாணவர்கள்,' குருவே, நீங்களும் ஒவ்வொரு முறையும் அறிவுரை சொல்லி பார்க்கிறீர்கள்.,அவன் திருந்தியபாடில்லை,அவனை குருகுலத்தை விட்டு வெளியேற்றுங்கள்,இல்லையென்றால் நாங்களெல்லாம் வெளியேறிவிடுவோம்',என்று ஆவேசத்துடன் கூறினர்.. குரு அவர்களை நிதானமாக பார்த்து,'நான் அவனை வெளியேற்றப்போவதில்லை,வேண்டுமானால் நீங்கள் வெளியேறுங்கள்',என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சி யுற்ற மற்ற மாணவர்கள் குருவை நோக்கி,'ஒரு திருட்டு,ஏமாற்று மாணவனுக்காக, நல்ல மாணவர்களாகிய எங்களை வெளியேற சொல்கிறீர்களே!உங்களுக்கென்ன பைத்தியமா?'என்றனர்.அதற்கு அந்த குரு புன்னகை நிரம்பிய முகத்துடன்,'என் அன்புக்குரிய மாணவர்களே!நீங்கள் எல்லாம் நல்ல பண்பை கற்று தேர்ந்து விட்டீர்கள்,ஆதலால் நீங்கள் இங்கிருந்து வெளியேறினாலும் சமூகத்திற்கு நல்லதையேசெய்வீர்கள்,நல்லவிதமாய் நடந்து கொள்வீர்கள். அதனார் எனக்கு பெருமையே,ஆனால் அந்த மாணவன் திருடக்கூடாது பிறரை ஏமாற்றக்கூடாது என்ற பாடத்தை இன்னும் அவன் புரிந்து கொள்ளவில்லை.
அதை நன்கு அவன் கற்றுத் தேர்ந்தபின் அனுப்புவதே எனது கடமை, ஏனென்றால் அவனும் எனது மாணவன்,எனது குழந்தைதான்,அதற்குமுன் அவனை நான் இங்கிருந்து அனுப்பினால் இந்த சமூகமும் பாதிக்கப்படும்,நம்மையும் இகழ்வார்கள்.அதனால் அவனை நல்ல பண்பினால் வளர்த்தெடுத்த பின்பே இங்கிருந்து அனுப்புவேன்',என்று குருநாதர் கூறியபின்பு அதில் ஒளிந்திருக்கும் உண்மை அனைவருக்கும் புரிந்தது. எதையாவது காரணம் காட்டி மாணவனை புறந்தள்ளுவதோ, புறக்கணிப்பதோ ஆசிரியன் அல்ல.பொறுமையுடன் அவனை திருத்திநல்வழிப்படுத்த முயல்பவனே சிறந்த ஆசிரியன்.

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence